
இந்தாண்டு நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பையை எட்டிப்பிடிக்க இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு படி மட்டுமே முன்னேற வேண்டியிருந்தது. ஆனால் எப்போதும் போல ஒரு பலமான இந்திய அணி இருந்தும் கூட அந்த இறுதிப்படியானது வழுக்கும் படியாகவே அமைந்தது. ‘இந்திய மண்ணில் நடந்த ஒரு உலகக்கோப்பையை பலம் வாய்ந்த இந்த இந்திய அணியாலேயே வெல்லமுடியவில்லை என்றால், இனி எப்போது இந்திய அணி கோப்பை வெல்லப்போகிறது’ என்ற ஆதங்கம் ஒவ்வொரு இந்திய ரசிகனுக்கும் அதிகமாகவே இருக்கிறது.
இதற்கிடையில் இறுதிப்போட்டியில் ஏன் அஸ்வின் இடம்பெறவில்லை? அவர் இடம்பெற்றிருந்தால் டிராவிஸ் ஹெட்டை எளிதாக வெளியேற்றியிருப்பார்? ஏன் ரோஹித் சர்மா பொறுப்போடு இறுதிவரை நின்று விளையாடவில்லை? ஏன் ராகுல் அதிரடிக்கு செல்லவில்லை? என்ற பலகேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த அத்தனை கேள்விக்கும் பதிலளிக்கும் வகையில், “கேப்டனாக ரோகித் சர்மாவின் குழப்பத்தை ஒரு சகவீரராக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இறுதிப்போட்டியில் அதை செய்திருக்கலாம், இதை செய்திருக்கலாம் என எளிதாக கூறிவிட முடியும். பைனல் வரை எல்லாமே இந்திய அணிக்கு சரியாக தான் சென்றுகொண்டிருந்தது. எந்த வீரரையும் நாம் குறை சொல்லிவிட முடியாது. இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக நான் 3 நாட்களாக தயாராகிகொண்டிருந்தேன். எவ்வளவு தீவிரமாக தயாராகினேன் என்றால், யாருடைய அழைப்பையும் எடுக்கவில்லை, ஏன் வாட்ஸப் மெசேஜ்ஜை கூட பார்க்கவில்லை. மொபைல் போனை ஒதுக்கிவைத்துவிட்டு என்னை தயார்படுத்திக்கொண்டிருந்தேன்.