
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த தொடரில் இந்திய பேட்டிங் துறையின் இரு துருவங்களாக போற்றப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி நல்ல ஃபார்மில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக இலங்கை எதிரான போட்டியில் 53 ரன்கள் அடித்த ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிக் கொண்டிருந்த அவர் கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்குவதற்கு கொடுத்த வாய்ப்பை பொன்னாக மாற்றினார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், அதிகபட்ச ஸ்கோர் (264), 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் போன்ற நிறைய உலக சாதனைகளை படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டில் நாயகனாகவே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பொதுவாகவே டெத் ஓவர்களில் எதிரணி பவுலர்களை தெறிக்க விடும் இந்திய கேப்டன் என்றால் அது எம்எஸ் தோனியாக பார்க்கப்படுகிறார்.