தோனியுடன் ராகுலை ஒப்பிட தேவையில்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
தோனியுடன் ராகுலை ஒப்பிட தேவையில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் ஒரு தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
காயத்தினால் சில மாதங்களாக விளையாடாமல் இருந்த நட்சத்திர விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர், தனது முதல் கம்பேக் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்த, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவிற்கு ஆலோசனை கூறி வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் தான் என்பது தீர்க்கமாக முடிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. அதற்கேற்ப கேஎல் ராகுலும் சிறப்பாக விளையாடி வருவதால், எந்த மாற்றத்தையும் செய்ய தேவையில்லை என்று ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Trending
இந்நிலையில் கேஎல் ராகுல் குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை விடவும், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை நான் அதிகம் ரசித்து விளையாடி இருக்கிறேன் என்று தோனி ஒருமுறை என்னிடம் கூறினார். ஏனென்றால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அதிக பரபரப்புடன் இருக்கும்.
ஒருநாள் கிரிக்கெட்டை பார்க்க சோகமாக உள்ளது. ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டின் அழகே, அதன் தன்மை தான். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் ஒரு அணி மீது அழுத்தம் அதிகரிக்கும். அந்த அழுத்தத்தை உணர்ந்து, அதே அழுத்தத்தை எதிரணிக்கு மீண்டும் அளிக்க வேண்டும். இப்படி மாற்றி மாற்றி பிரஷர் வருவதில் தான் ஒருநாள் கிரிக்கெட்டின் அழகு இருக்கிறது என்று தோனி என்னிடம் கூறினார்.
அப்படியான ஒரு ஆட்டத்தை இந்திய அணியின் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் விளையாடி வருகிறார் என்று நினைக்கிறேன். தோனியுடன் ராகுலை ஒப்பிட தேவையில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் ஒரு தரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏனென்றால் விராட் கோலி, ஷுப்மன் கில், ரோகித் சர்மா என்று அனைவரும் துனித் வெல்லாலகே பந்தில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் கேஎல் ராகுல் களம் புகுந்தார். அப்போது மீண்டும் வெல்லாலகே அட்டாக்கில் வரும் போது, கேஎல் ராகுல் 2 பந்துகளை விக்கெட் கீப்பரிடம் விட்டார். அதுவொரு சிறந்த பேட்ஸ்மேனின் அடையாளம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எந்த மாதிரியான பந்துகளை வீசுகிறார் என்பதை பார்த்து, கடைசியில் பார்த்துக் கொள்கிறேன் என்ற திட்டத்துடன் இருக்கிறார் கேஎல் ராகுல். அதனால் தான் கேஎல் ராகுல் 5ஆவது இடத்தில் இறங்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now