
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி நேற்று முந்தினம் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த சில தினங்களில் கோலி இப்படி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து விராட் கோலி அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்தும் கேப்டன் பதவியைத் துறந்தது குறித்து பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய கிரிக்கெட்அணியின் கேப்டனாக செயல்படப்போவது யார் என்பது தேர்வுக் குழுவினரை பொறுத்தவரைக்கும் ஒரு விவாதமாக இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரிஷப் பந்தை பார்க்கிறேன்.
ஏனெனில் ரிக்கி பாண்டிங் விலகியபோது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி ரோகித் சர்மாவிற்கு வழங்கப்பட்டது. அப்போதிலிருந்தே ரோகித் சர்மாவின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் கூட 50, 100, 150, 200 என தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே போன்று தான் தற்போது ரிஷப் பந்தும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து இந்த தென் ஆப்பிரிக்க தொடரின் கடைசி போட்டியில் அற்புதமான சதத்தை அடித்தார்.