
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள ஒருநாள் தொடரின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றுள்ளது. இருப்பினும் இத்தொடரில் மேலும் இரண்டு டி20 போட்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்காது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டி20 போட்டிகளில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி விலகியதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது 2 ஓவர்களை வீசிய ரீஸ் டாப்லி காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே பெவிலியனுக்கு திரும்பினார். இதனையடுத்து அவருக்கான மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.