
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கின்றன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பின் அபுதாபி சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு ஒருசில தினங்களுக்கு முன் இந்தியா வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களைக் கட்டிலும், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் அறிமுகமில்லாத ரெஹான் அஹ்மத், டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பஷீர் ஆகியோர் இணைந்து இரண்டு போட்டிகளில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.