
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலவச ரன்களை வழங்கி வருவது ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி, 4வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ்க்கு பதில், முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். இப்போட்டியில் டாசை இழந்து இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது.
பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவை 200 ரன்களுக்குள் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், 2 வார ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ள முகமது ஷமி பந்தை சரியான லைனில் வீசாமல் தடுமாறினார். இதனால் பந்து அங்கும், இங்கும் சென்றது. இதனை கணித்து பந்தை பிடிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் பரத் தடுமாறினார். இதனால் முதல் 5 ஓவரில் மட்டும் இந்திய அணி கூடுதல் ரன்களாக 11 தரப்பட்டது.
அப்போது கிரிக்கெட் வர்ணணையில் இருந்த கவாஸ்கர், இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக வறுத்து எடுத்தார். முகமது ஷமி தொடர்ந்து பந்துவீசினால் தான் அவர் அபாயகரமான வீரராக இருப்பார் என்றும், 2ஆவது டெஸ்ட்டுக்கும், 3ஆவது டெஸ்ட்க்கும் 10 நாட்களுக்கு மேல் இடைவெளி இருந்தும், 3ஆவது டெஸ்டில் ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டது முட்டாள் தனமான முடிவு என்றும் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.