பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டார் - ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டாப் ஆர்டரில் பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. முன்னதாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்துள்ளன.
அதிலும் குறிப்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்து தற்போது, தொடர்ந்து 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் அந்த அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா தொடர்ந்து சொதப்பி வருவது பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு சீசனில் 6 போட்டிகள். கடந்த சீசனின் பிற்பாதியில் 6 அல்லது 7 போட்டிகள் என நான் நினைக்கிறேன். அதாவது 12 அல்லது 13 போட்டிகளாக இன்னிங்ஸை ஓப்பன் செய்யும் பிரித்வி ஷா, அரைசதம் பதிவு செய்யவில்லை. எங்களுக்கு டாப் ஆர்டரில் ஸ்பார்க் தேவைப்பட்டது. ஆனால், அவர் அதனை கொடுக்க தவறி விட்டார். அவர் மேட்ச் வின்னர் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் தான் அவரை அணியில் தக்க வைத்தோம். களத்தில் அவர் குறிப்பிட்ட பந்துகளை எதிர்கொண்டு விட்டால் நாங்கள் 95 சதவீதம் வெற்றி பெறுவோம் என்பதை அறிவோம். இருந்தும் நடப்பு சீசனில் 47 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். அது போதவே போதாது.
Trending
நடப்பு சீசனுக்கு முன்னதாக அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில நாட்கள் இருந்தார். ஃபிட்னஸ் சார்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். வலை பயிற்சியின் போது அவரது அர்ப்பணிப்பை பார்த்த நான் இந்த சீசன் அவருக்கு சிறப்பானதாக அமையும் என கருதினேன். அதையே சொன்னேன். அது நடக்கவில்லை. மற்ற அணிகள் எல்லாம் நல்ல ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களை டாப் ஆர்டரில் கொண்டுள்ளது. டி20 கிரிக்கெட்டில் ஆங்கரிங் ரோலுக்கான பணி மறைந்து வருகிறது.
இந்த சீசனில் நாங்கள் எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை. 40 ஓவர்களுக்கு எங்களால் உயர்ந்த தரத்திலான கிரிக்கெட் ஆட முடியவில்லை. சில நாள் பேட்டிங் நன்றாக இருந்தால், பவுலிங்கில் சொதப்புகிறோம். அதே போல பவுலிங் நன்றாக இருந்தால், பேட்டிங் மங்கி விடுகிறது. இரண்டாவது பாதி சீசனில் தரமான கிரிக்கெட் ஆட முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now