
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. முன்னதாக ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதும் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதுவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது. மேலும் அத்தொடருடனே டிராவிட்டின் பயிற்சி காலமும் நிறைவடைந்த நிலையில், அவரது பதிவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடைகிறது.
இதனால் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதன்படி பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. மேற்கொண்டு நியூசிலாந்தின் ஸ்டீஃபன் பிளெமிங், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.