
Rishabh Pant Records: ஹெடிங்லே நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்களையும் சேர்த்து ஆல் ஆவுட்டானது. அதன்பின் 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், சாய் சுதர்ஷன் 30 ரன்னிலும், ஷுப்மன் கில் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேஎல் ராகுல் தனது 9ஆவது சதத்தையும், ரிஷப் பந்த் தனது 8ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தனர். அதன்பின் 118 ரன்களில் ரிஷப் பந்த் விக்கெட்டை இழக்க, நான்காம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ரிஷப் பந்த் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.