
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இத்தொடரின் இறுதிப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நாளை (பிப்ரவரி 14) நடைபெறும் நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே இத்தொடரில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணியும் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். இந்நிலையில் பாபர் ஆசாம் தனது ஃபார்மை மீட்டெடுப்பார் என்று அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.