
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
அதனைத்தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. இதனால் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவின் மீதான எதிர்பார்ப்புகளையும் அவர் பூர்த்தி செய்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமைத் திறன்களைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்டு பேசிய அவர், “ரோஹித் சர்மா போட்டியின் போது டாஸில் பேட் செய்வதா அல்லது பந்து வீசுவதா என்பதை முடிவு செய்வதிலும், அணி பேருந்தில் அவரது தொலைபேசி மற்றும் ஐபேட் உள்ளிட்டவற்றை மறந்தாலும், அவர் தனது விளையாட்டை ஒருபோதும் மறக்க மாட்டார்.