
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.வ்இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று (1-8-22) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து பெரும் ஏமாற்றம் கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா (31), ரவீந்திர ஜடேஜா (27) மற்றும் ரிஷப் பண்ட் (24) ஆகியோரை தவிர மற்றவர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 138 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி ஆல் அவுட்டானது. விண்டீஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஓபட் மெக்காய் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன்பின் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான பிராண்டன் கிங் 68 ரன்களும், விக்கெட் கீப்பரான டீவன் தாமஸ் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.2 ஓவரில் இலக்கை எட்டிய விண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.