
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 57 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியானது அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் அந்த அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாகவே ஹாரி புரூக் 25 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் அக்ஸர் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.