இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளதுடன், முதலிடத்தைப் பிடித்த மிகவும் அதிக வயதுடைய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஒரு அரைசதம், ஒரு சதத்தை விளாசிய ரோஹித் சர்மா, தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர இரண்டாம் இடத்தில் ஆஃப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஸத்ரான் நீடிக்கும் நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சோபிக்க தவறியதன் காரணமாக முதலிடத்தில் இருந்த ஷுப்மன் கில் இரண்டு இடங்கள் பின் தங்கியதுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.