-lg1-mdl.jpg)
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அதன்பின் தனது விஸ்வரூபத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா அடுத்தடுத்து சிக்ஸரையும் பவுண்டரியையும் விளாசி 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதேசமயம் மறுபக்கம் ரிஷப் பந்த் 15 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 92 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களையும், ஷிவம் தூபே 28 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 27 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.