
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி முதல் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியானது 290 ரன்களைக் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணியை விட 99 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.
பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியானது தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் ரோஹித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது சதத்தை பதிவு செய்தார்.