
தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்ததால் இரு அணிகளும் பேட்டிங்கில் கடுமையாக திணறின. தென் ஆப்ரிக்கா அணி சார்பில் ரபாடாவும், இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் சிராஜும் விக்கெட் வேட்டை நடத்தினார். ஓரிரு பேட்ஸ்மேன்களை தவிர மற்றவர்களால் பெரிதாக எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் வெறும் 642 பந்துகளில் முடிவை எட்டிய இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்தது.
அதிலும் குறிப்பாக இப்போட்டியின் முதல் நாளில் மட்டுமே 23 விக்கெட்டுகளை வீழ்ந்தன. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த ஆடுகளம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், ஆடுகளத்தை குறை கூறுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.