எதிர்பாராத கேட்ச்சின் மூலம் ரோஹித் சர்மாவை வெளியேற்றிய மேக்ஸ்வெல் - காணொளி!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை தனது அசாத்தியமான கேட்சின் மூலம் கைப்பற்றிய கிளென் மேக்ஸ்வெல்லின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை எடுத்தது. குறிப்பாக ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் அதிரடியாக விளையாடிய அந்த அணிக்கு டேவிட் வார்னர் 56, மிட்சேல் மார்ஷ் 94, ஸ்டீவ் ஸ்மித் 74, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்து பெரிய ஸ்கோர் குவிக்க உதவினர்.
இருப்பினும் 400 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இதை தொடர்ந்து 353 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மாவுடன் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். இருப்பினும் அதில் வாஷிங்டன் சுந்தர் தடுமாற்றமாகவே செயல்பட்டு நிலையில் மறுபுறம் தன்னுடைய அதிரடியான ஸ்டைலில் விளையாடிய ரோஹித் சர்மா மளமளவென ஸ்கோரை உயர்த்தினார்.
Trending
இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட்க்கு எதிராக தமக்கு மிகவும் பிடித்த ஃபுல் ஷாட் வாயிலாக சிக்ஸர் அடித்த அவர் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ்க்கு எதிராக 2 சிக்ஸர்களை அடித்து மைதானத்திற்கு வந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். பொதுவாகவே ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ் ஆகிய 3 வீரர்களை கொண்டிருப்பதால் ஆஸ்திரேலியா உலகிலேயே மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு அட்டாக்கை கொண்ட அணியாக வல்லுனர்களாலும் முன்னாள் வீரர்களாலும் போற்றப்படுகிறது.
ஆனால் அப்படிப்பட்ட அந்த 3 தரமான பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட்க்கு ஆகிய மூவருக்கு எதிராகவும் சிக்ஸர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் 10 ஓவர்களுக்குள் 31 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 13 வருடங்கள் கழித்து பவர் பிளே ஓவர்களிலேயே அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். கடைசியாக கடந்த 2010இல் நியூசிலாந்துக்கு எதிராக கம்பீர் 51 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.
What a catch Maxwell #Maxwell #IndvsAus pic.twitter.com/UvgspDQgGV
— Rana Jamshaid (@RanaJam74908100) September 27, 2023
அப்படி அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 81 ரன்கள் எடுத்த நிலையில் பந்துவீச்சு முனையில் கிளென் மேக்ஸ்வெல்லின் அபாரமான கேட்ச் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் கேட்சை மேக்ஸ்வெல் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now