மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் 10 ரன்களுக்கு மேல் எடுக்காமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக சிட்னி டெஸ்ட் போட்டியிலும் அவர் பிளேயிங் லெவனில் இருந்து விலகினார்.
Trending
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல்களும் வெளியாகின. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என்பதை ரோஹித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியின் போதே செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்தார்.
ஆனால் அவரின் மோசமான ஃபார்மின் காரணமாக, அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ரஞ்சி கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுவரும் மும்பை அணியுடன் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். 2024-25ஆம் ஆண்டிற்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 5 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த சுற்று போட்டிகள் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
Rohit Sharma has joined Mumbai's Ranji Trophy team at the Wankhede Stadium!#CricketTwitter #Mumbai pic.twitter.com/BsR7CGCCun
— CRICKETNMORE (@cricketnmore) January 14, 2025இதில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டி டிரா என மொத்தம் 22 புள்ளிகளைப் பெற்று எலைட் குரூப் ஏ பிரிவில் 3ஆம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மோசமான ஃபார்மை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா எஞ்சியுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
இருப்பினும் இங்கிலாந்து ஒருநாள் தொடர், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்பதால், ரஞ்சி கோப்பை தொடரில் அவரால் விளையாட முடியுமா அல்லது சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சி ஈடுபட மும்பை அணியுடன் அவர் இணைந்துள்ளாரா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுதியது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now