
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல்முறையாக கேப் டவுன் மைதானத்தில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதேபோல் தோனிக்கு பின் முதல் முறையாக ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா என்று பாதி அணியில் விளையாடிய வீரர்கள் தென் ஆப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக விளையாடியவர்கள்.
இவர்களை கொண்டு இந்திய அணி டெஸ்ட் தொடரை சமன் செய்திருப்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் சேர்த்து 4 இன்னிங்ஸ்களில் பேட் செய்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் மொத்தமாக 50 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலே சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.