
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ள இந்தியா நம்பர் ஒன் அணி என்பதற்கு அடையாளமாக செயல்பட்டு 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.
இந்தூரில் நேற்று நடைபெற்ற இத்தொடரின் 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 173 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக குல்பதின் நைப் 57 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதைனை சேஸிங் செய்த இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 68 ரன்களையும், ஷிவம் தூபே 63 ரன்களையும் குவித்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
முன்னதாக இந்த போட்டியில் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை படைத்தார். இருப்பினும் அதில் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றியில் தன்னுடைய பங்காற்றினார்.