உலகக் கோப்பை எப்போது தொடங்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் - ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் உலகக்கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் கனவு என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஒருநாள் உலககோப்பை தொடர் இந்த வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படுகிறது. நான்காவது முறையாக இந்த உலகக்கோப்பை இந்தியாவில் நடத்தப்படுவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. ஏனெனில் கடைசியாக 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பின் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.
இந்நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு ஏப்ரல் 2ஆம் தேதி கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். இந்த தருணத்தில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த வருடம் இந்தியாவில் நடத்தப்படும் உலக கோப்பை குறித்தும் அதற்காக இந்திய அணி எத்தகைய முனைப்புடன் இருக்கிறது என்பது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “உலக கோப்பையை சொந்த மண்ணில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும் கனவு. அதிலும் கேப்டனாக இருக்கும் எனக்கு கூடுதல் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. உலகக் கோப்பை எப்போது தொடங்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இந்திய வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு, அடுத்த சில மாதங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுக்க உள்ளோம். இந்த ஆண்டு உலகக்கோப்பையை மீண்டும் பெறுவதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.
உலகக்கோப்பை துவங்குவதற்கு இன்னும் சரியாக ஆறு மாத காலம் இருக்கின்றது. அதற்குள் உலக கோப்பை குறித்த ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒட்டுமொத்த அணியாக செயல்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு காத்திருக்கிறோம். இம்முறை பலம் மிக்க அணியாக இந்தியா காணப்படுகிறது. அதை எப்படி சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கோப்பையை வெல்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று திட்டமிட்டு வருகிறோம்” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now