
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று வெற்றிகளை பதிவுசெய்துள்ள நிலையில், நாளை தனது 4ஆவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியை வழி நடத்தி வரும் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு புனே நகர காவல்துறையினர் மூன்று அபராதங்களை விதித்துள்ள தகவல் தற்போது இணையத்தில் அதிக அளவு கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா அகமதாபாத்தில் இருந்து மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதாக முடிவு எடுத்துள்ளார். அதன்படி மும்பை சென்ற அவர் அங்கு இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்த பின்னர் மீண்டும் புனே நகருக்கு செல்ல வேண்டும் என்பதனால் தனது சொகுசு காரில் பயணம் செய்ய முடிவு எடுத்துள்ளார்.
அதன்படி மும்பையில் இருந்து புனே நகருக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பயணித்த ரோஹித் சர்மா மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தையும் தாண்டி தனது சொகுசு காரில் பயணித்ததாக சாலையில் பொருத்தப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு கருவில் பதிவாகியுள்ளது. ரோஹித் சர்மா பயணித்த அந்த கார் மூன்று இடங்களில் 200-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது.