
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை லீக் போட்டியானது இன்று தர்மசாலா நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதோடு இந்த உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து தற்போது 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 273 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பாக டேரல் மிட்சல் 130 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 48 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 95 ரன்களையும், கேப்டன் ரோஹித் சர்மா 46 ரன்களையும் குவித்து அசத்தினர்.