
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இருந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியானது பார்படாஸில் இன்று நடைபெறெவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் ஆகியோரது சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளார். அதன்படி நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 3 அரைசதங்களுடன் 248 ரன்களைச் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாமின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் 303 ரன்கள் எடுத்திருந்ததே இதுநாள் வரை டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு கேப்டன் அடித்துள்ள அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.