
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நிறைய பரபரப்பான போட்டிகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவு பெற்று ரசிகர்களை மகிழ்வித்தது. அதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் இலங்கையை நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8ஆவது முறையாக கோப்பையை வென்று வெற்றிகரமான ஆசிய அணி என்ற சாதனை படைத்தது.
விரைவில் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த தொடரில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை தோற்கடித்து இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த சூழ்நிலையில் கே ல் ராகுல், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து இத்தொடரில் களமிறங்கி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியது இந்திய அணிக்கு பலமாகவும் அமைந்துள்ளது.
முன்னதாக இத்தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அக்சர் படேல் காயமடைந்து வெளியேறியதால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆசிய கோப்பையில் தேர்வாகி ஃபைனலில் நேரடியாக களமிறங்கும் வாய்ப்பையும் பெற்றார். குறிப்பாக ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய இருவருமே இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருப்பதால் ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற சூழ்நிலையில் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டிருப்பார் என்று நம்பப்படுகிறது.