
இந்திய கிரிக்கெட்டில் இடதுகை வலதுகை காம்பினேஷனை தொடக்க இடத்தில் தந்ததில் கங்குலி மற்றும் சச்சின் ஜோடி மிகவும் சிறந்த ஜோடியாக இருக்கிறது. இவர்களின் காலத்திற்குப் பிறகு இதே முறையில் ஷேவாக் மற்றும் கம்பீர் இருவரும் சிறிது காலம் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணிக்கு துவக்க இடத்தில் பங்காற்றி இருக்கிறார்கள்.
அதன்பின் குறிப்பிடத்தக்க அளவில் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இடதுகை வலதுகை காம்பினேஷன் கொடுத்த வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் தற்போதைய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் இருக்கிறார்கள். இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க இருக்கும் உலகக் கோப்பை இந்திய அணியில் வெற்றிகரமான ஒரு நாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு இடம் கிடைக்கப்படவில்லை. அவருடைய இடம் வலது கை இளம் வீரர் ஷுப்மன் கில் கொண்டு நிரப்பப்பட்டு இருக்கிறது.
கடந்த வருடத்தில் இந்திய கிரிக்கெட் வட்டாரம் தாண்டி உலக கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா தான் இருப்பார்கள் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இளம் வீரர் கில்லை கொண்டு வந்து துவக்க வீரராக களம் இறக்கி தற்போது அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டிருக்கிறது.