
மும்பையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய நிலையில் 2013இல் அப்போதைய கேப்டன் எம்எஸ் தோனி தொடக்க வீரராக களமிறங்குவதற்கான வாய்ப்பை கொடுத்தார். அதை இறுக்கமாக பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்டாக 3 இரட்டை சதங்கள் அடித்த அவர் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ளதால் இன்று இந்தியாவின் 3 வகையான அணிகளுக்கு முழு நேர கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடிக்காத அவர் இன்று கேப்டனாக சொந்த மண்ணில் தேசத்தை வழி நடத்த உள்ளார். முன்னதாக தொடக்க வீரராக அதிரடியாக விளையாடுவதற்கு பெயர் போன ரோஹித் சர்மா சிக்ஸர்களை பறக்க விடுவதில் வல்லவராக இருக்கிறார். குறிப்பாக எதிரணி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளை அசால்டாக புல் ஷாட் வாயிலாக சிக்சர் அடிக்கும் அவர் இதுவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முறையே 77, 280, 182 என மொத்தம் 539 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இதன் மூலம் உலக அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரராக ஏற்கனவே சாதனை படைத்துள்ள அவர் இன்னும் 14 சிக்ஸர்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை (553) முந்தி புதிய சரித்திரம் படைப்பார். இந்நிலையில் கிறிஸ் கெயிலின் அந்த சாதனையை உடைக்க விரும்புவதாக தெரிவிக்கும் ரோகித் சர்மா ஆரம்ப காலங்களில் அதைப்பற்றி கனவில் கூட நினைத்ததில்லை என்று கூறியுள்ளார்.