
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன. அப்போட்டியில் இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து 6ஆவது கோப்பையை வெல்வோமா என்ற எதிர்பார்ப்பு ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் காணப்படுகிறது.
மறுபுறம் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் உச்சகட்டமாக காணப்படுகிறது. இந்த போட்டியில் கடைசி நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருக்கிறது.
ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் போன்ற இடது கை வீரர்களுக்கு சவாலை கொடுப்பதற்கு அஸ்வின் தேவை என்று நிறைய ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வரும் இந்திய அணியில் மாற்றங்களை செய்து அஸ்வினை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஒருவேளை ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்க விரும்பினால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 3 ஓவர்கள் வீச வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.