
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நாளை தொடங்க இருக்கிறது . இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு பத்தாண்டுகளாக இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரை இறுதி போட்டி 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் அரை இறுதி போட்டி 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டி என தொடர் தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறது .
தற்போது மீண்டும் ஒரு ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது . 2023 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய எதிர்த்து விளையாட இருக்கிறது . கடந்த 10 ஆண்டுகளாக எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருக்கிறது . 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது .