
2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடர் இந்தியாவில் நடத்தப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை தோனி தலைமையிலான இந்திய அணி தனது சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்றது போல் ரோகித் சர்மா படையும் சாதனை படைக்குமா என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்காக என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பிசிசிஐ இன்று சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட், வி வி எஸ் லட்சுமணன், ரோஜர் பின்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கடந்த டி20 உலக கோப்பை செய்த தவறை மீண்டும் ஒருமுறை செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்குமாறு ரோஹித் சர்மா குழுவிற்கு பிசிசிஐ அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்கள் விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதில் 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 20 வீரர்களை வைத்துதான் 50 உலகக் கோப்பையை இந்திய அணி சந்திக்க உள்ளது. இந்த 20 வீரர்களையும் இனிவரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்திய அணி சுமார் 31 நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவுறுத்தல்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.