
ஐபிஎல் 2024 சீசன் முதல் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியாவை சமீபத்தில் டிரேடிங் முறையில் வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தங்கள் அணியை வழி நடத்துமாறு நியமித்துள்ளது.
ஆனால் சச்சின் முதல் பாண்டிங் தலைமையில் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வந்த மும்பைக்கு 2013இல் கேப்டனாக பெற்ற முதல் வருடத்திலேயே ரோஹித் சர்மா சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார். அதன் பின் 2020க்குள் மொத்தமாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் குறுகிய காலத்திலேயே மும்பையை வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிக்க வைத்தார்.
இதனால் இன்று இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் சர்மாவுக்கு தரத்திலும் அனுபவத்திலும் நிகரில்லாத ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது மும்பை ரசிகர்களிடமே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்திய வருடங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து வரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து மும்பை தவறான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.