
இங்கிலாந்து அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஹாரி புரூக், ஜோ ரூட் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது முல்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில் கூடுதலாக 33 புள்ளிகளைப் பெற்று தனது இடத்தை கெட்டியாக பிடித்துள்ளார்.
அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முற்சதம் விளாசி அசத்திய ஹாரி புரூக் 11 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனுடன் இணைந்து ஹாரி புரூக் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் பின் தங்கி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.