
இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று (ஆகஸ்ட் 29) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - டேன் லாரன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேன் லாரன்ஸ் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து பென் டக்கெட்டுடன் இணைந்த ஜோ ரூட் அபாரமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 40 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய ஹாரி ப்ரூக் 33 ரன்களுக்கும், ஜேமி ஸ்மித் 21 ரன்களுக்கும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ரூட் - கஸ் அட்கின்சன் இணை அதிரடியாக விளையாடியதுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில், ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 33ஆவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார்.