
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராகும் பயணத்தின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி விளையாடுகிறது.
இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி சவாலான தென் ஆபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது. இருப்பினும் நேற்று டர்பன் நகரில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போதைய இளம் இந்திய அணி பேட்ஸ்மேன்களில் வலைப்பயிற்சி செய்யும் போது தங்களுக்குள் யார் அதிக சிக்ஸர்கள் அடிப்பார்கள் என்ற போட்டி வைத்திருப்பதாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ஆனால் அதில் சற்று மெதுவாக விளையாடக்கூடிய தம்மை விட அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடிய ஜெய்ஸ்வால் மற்றும் ஃபினிஷராக அசத்தும் ரிங்கு சிங் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.