
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடந்து முடிந்திருந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்ததது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த பாபர் ஆசாம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இப்போட்டியில் இருவரும் தங்கள் அரைசதங்களை கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் 52 ரன்களை எடுத்திருந்த நிலையில் பாபர் ஆசாம் தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 101 ரன்கள் எடுத்த கையோடு சைம் அயூப் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய காம்ரன் குலாமும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழதார். மறுபக்கம் அரைசதம் கடந்த கேப்டன் முகமது ரிஸ்வானும் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் சல்மான் ஆகா அதிரடியாக விளையாடி 48 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.