
எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிருப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜோர்டன் ஹார்மன் மற்றும் ஸாக் கிரௌலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் பொறுப்புடன் விளையாடி முதல் விக்கெட்டிற்கு 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் 27 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஸாக் கிரௌலி தனது விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜோர்டன் ஹார்மனும் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் அபெல் மற்றும் கேப்டன் ஐடன் மார்க்ரம் இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.
இதில் 20 ரன்களைச் சேர்த்த கையோடு டாம் அபெல் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஐடன் மார்க்ரம் தனது அரைசத்ததைப் பதிவுசெய்தார். அவருக்கு துணையாக டிரிஸ்டன் ஸ்டப்ஸும் பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலிமையான நிலையை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 82 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார்.