எஸ்ஏ20 2025: குர்பாஸ், ஜேக்ஸ் அதிரடி வீண்; பிரிட்டோரியாவை 2 ரன்களில் வீழ்த்தி டர்பன் த்ரில் வெற்றி!
எஸ்ஏ20 லீக் 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
எஸ்ஏ20 லீக் டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு பிரைஸ் பார்சன்ஸ் மற்றும் மேத்யூ பிரீஸ்ட்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரீட்ஸ்கி 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பிரைஸ் பார்சன்ஸும் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Trending
பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன் - குயின்டன் டி காக் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் வில்லியம்சன் ஒருபக்கம் நிதானமாக விளையாடிய நிலையில், மறுமுனையில் அதிரடியாக விளையாட முயற்சித்த டி காக் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசெனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் டர்பன் அணியின் ஸ்கோர் வேகமும் சரியத்தொடங்கியது. இதையடுத்து வில்லியம்சனுடன் இணைந்த வியான் மில்டர் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் பொறுப்புடன் விளையாடிய கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேன் வில்லியம்சன் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களையும், அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய வியான் முல்டர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 45 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. பிரிட்டோரியா அணி தரப்பில் செனுரன் முத்துசாமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் வில் ஜேக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்னர் இருவரும் சேர்ந்த முதல் விக்கெட்டிற்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 3 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 89 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரைலீ ரூஸோவும் ஒரு ரன்னில் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான வில் ஜேக்ஸும் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 64 ரன்களை எடுத்த் கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய செனுரன் முத்துசாமி 8 ரன்களுக்கும், அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் 13 ரன்களுக்கும், ஜிம்மி நீஷம் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 195 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையும் உருவானது.
Also Read: Funding To Save Test Cricket
பிரிட்டோரியா அணி தரப்பில் கைல் வெர்ரைன், ஸ்டேவ் ஸ்டோல்க் எதிர்கொண்ட நிலையில் டர்பன் தரப்பில் நவீன் உல் ஹக் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் பிரிட்டோரியா அணியால் 11 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை மட்டுமே சேர்த்தது. டர்பன் தரப்பில் கிறிஸ் வோக்ஸ், நூர் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now