
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் குயின்டன் டி காக் 5 ரன்னிலும், பிராண்டன் கிங் 4 ரன்னிலும், மேத்யூ பிரீட்ஸ்கி 6 ரன்னிலும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 22 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து பவுண்டரிகளை விளாசித் தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிளாசென் மற்றும் வில்லியம்சன் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர்.