
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரஸ்ஸி வேண்டர் டுசென் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ரியான் ரிக்கெல்டன் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 30 ரன்களுடன் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய காலின் இங்ராமும் 16 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரிஸா ஹென்றிக்ஸ் மற்றும் டெவால்ட் பிரீவிஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ரீஸா ஹென்றிக்ஸ் 31 பந்துகளிலும், டெவால்ட் பிரீவிஸ் 23 பந்துகளிலும் என அடுத்தடுத்து தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரீஸா ஹென்றிக்ஸ் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 77 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் தலா 6 பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு 73 ரன்களையும் சேர்த்தனர்.