
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எம்ஐ கேப்டவுன் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - மிட்செல் ஓவன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் ஓவன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பிரிட்டோரியஸுடன் இணைந்த ருபின் ஹர்மன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.
இருவரும் அதிரடியாக விளையாடி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 59 ரன்களைச் சேர்த்த நிலையில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் டேவிட் மில்லர் 6 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 2 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஆண்டிலே பெஹ்லுக்வாயோ ஓரளவு தாக்குப்பிடித்து ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்தார்.