
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் எம் ஐ கேப்டவுன் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு வில் ஜேக்ஸ் - குசால் மெண்டீஸ் இணை தொடக்கம் தந்தனர். இதில் இருவரும் ஆரம்பத்திலேயே கொடுத்த அடுத்தடுத்த கேட்ச்சுகளை கேப்டவுன் வீரர்கள் தவறவிட்டனர்.
அதன்பின் அதிரடி காட்டத் தொடங்கிய இருவரும் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு அசத்தினர். அதிலும் காகிசோ ரபாடா, ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற அசுர வேகப்பந்துவீச்சாளர்களின் ஓவர்களை அடித்து நொறுக்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.