
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அடுது களமிறங்கிய இந்திய அணி 477 ரன்களை குவித்தது.
அதன்பின் 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதித்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 698 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.