
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2004இல் சௌரவ் கங்குலி தலைமையில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாகவும் விளையாட வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை உருவாக்கினார். அதை விட 2007இல் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தி முதல் வருடத்திலேயே டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில் 2010இல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்தினார்.
அத்துடன் 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து உலகக் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் நீண்ட நாள் தாகத்தை தணித்த அவர் 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா போன்ற இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்தார். அதனால் வரலாற்றில் 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று 2ஆவது வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கும் அவர் சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் உட்பட இதர இந்திய ஜாம்பவான் கேப்டன்களை மிஞ்சியுள்ளார். அப்படிப்பட்ட மகத்தான அவர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாக கேப்டனாக பொறுப்பேற்ற போது அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாதவராக இருந்தார்.