
ஐபிஎல் தொடரின் 2025ஆம் ஆண்டிற்கான சீசன் நேற்றுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்றிடாத அணி என்ற மோசமான சாதனைக்கும் ஆர்சிபி அணியானது முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு கோப்பையுடன், பரிசுத்தொகையாக ரூ. 20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேடயத்துடன், ரூ.12.5 கோடி பரிசுத்தொகையானது வழங்கப்பட்டுள்ளது.
ஆர்சிபி அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாடிய அதே வேளையில், போட்டிக்குப் பிந்தைய நிகழ்ச்சியில் சீசனில் தனிப்பட்ட விருது வென்றவர்களின் அறிவிப்பும் வெளியிடப்பட்டது - இதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய சாய் சுதர்சன், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் இடம்பெற்றனர்.