தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது.
இந்நிலையில் இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் சைம் அயூம் ஃபீல்டிங்கின் போது காயமடைந்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்படி இன்னிங்ஸின் 7ஆவது ஓவரின் போது ரியான் ரிக்கெல்டன் அடித்த பந்தை தடுக்கும் முயற்சின் போது அவர் தனது காலில் பலத்த காயத்தை சந்தித்தார். ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், அவரது காயம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இப்போட்டியில் இருந்து சைம் அயூப் விலகியதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் அவர் தனது காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது 6 வாரங்கள் தேவைப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் சைம் அயூப் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளதால், அது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சைம் அயூப் மேல் சிகிச்சைகாக லண்டன் செல்லவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.