
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் டி20 லீக் தனது பதினாறாவது சீசனில் தற்பொழுது அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. ஆனால் 16ஆவது சீசன் சில அணிகளுக்கு வருத்தத்துடன் ஆரம்பிக்கிறது.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இழந்து தொடரை சந்திக்க இருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 15 கோடிக்கு போய் கேப்டன் வேண்டும் என்பதற்காகவே கொல்கத்தா அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயரை போராடி வாங்கியது. மேலும் இந்திய ஆடுகளங்களில் அவர் திறமையான பேட்மேனும் கூட.
அவர் இல்லாமல் இந்த வருட ஐபிஎல் சீசனை ஆரம்பிப்பது கொல்கத்தா அணிக்கு விரும்பக்கூடிய ஒன்று அல்ல. தற்பொழுது இவருக்கு பதிலாக தற்காலிகமாக நிதிஷ் ராணா கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஸ்ரேயா ஐயர் இல்லாததால் பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.