IND vs AUS: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சாம்சன், சஹால்; ரசிகர்கள் அதிருப்தி!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இருவரையும் தேர்வு செய்யாதது ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், உடனடியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி நடக்கவுள்ள இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடருக்கு இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் முதல் 3 போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக செயல்படவுள்ளார். அதன்பின் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பிய பின், அவர் துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Trending
அந்த வகையில் திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். ஆனால் நட்சத்திர வீரர்களான சாஹல் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சாஹல் முதலிடத்தில் இருக்கிறார்.
அதேபோல் ஆசிய கோப்பை தொடர் இந்திய அணியுடன் சஞ்சு சாம்சன் பயணித்துள்ளார். இவர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இருவருமே புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருமே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகின்றனர்.
ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், முக்கியமான போட்டிகளுக்கு பெஞ்ச் செய்யப்பட்டு வருகிறார். தற்போது டி20 கிரிக்கெட்டை நன்றாக புரிந்து வைத்து இரு வீரர்களையும் பிசிசிஐ தேர்வு செய்யாமல் உள்ளது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு வியூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்வியை விமர்சித்து வரும் ரசிகர்களின் கவனத்தை திருப்பவே பிசிசிஐ வேண்டுமென்றே இரு வீரர்களையும் தேர்வு செய்யவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே விவாதம் தீவிரமடைந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now