
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி இன்ற் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அடுத்த வருடம் ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் முதல் படியாக இந்த தொடரை நவம்பர் 23 முதல் சொந்த மண்ணில் பிசிசிஐ நடத்துகிறது. இருப்பினும் உலகக்கோப்பை தோல்வியை சந்தித்ததால் கலங்கிய கண்களில் ஈரம் காய்வதற்குள் வெளியான இந்த அறிவிப்பு பல ரசிகர்களை கடுப்பாக வைப்பதாகவே இருக்கிறது என்று சொல்லலாம்.
இதில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், உலகக்கோப்பை தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவிற்கு அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் துணை கேப்டனாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்ற ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.